.

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள், நன்றி மீண்டும் வருக !
கரூர் மாவட்டத்தைப் பற்றிய சில, பல தகவல்கள் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதில் தவறு ஏதும் இருப்பின், தவறாமல் சொல்லவும் தவறுகள் திருத்திக்கொள்ளப்படும்

Monday, January 13, 2014

கரூர் வரலாறு 5ம் பாகம்
இரண்டாம் உலகப்போரின் போது கரூரின் நிலை,
            இரண்டாம் உலகப்போர் காரணமாக, இரவில் விளக்குகள் எரிப்பதற்கு கட்டுபபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஊரில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் சுற்றிலும் மூடி போடப்பட்டு இருந்தன. அந்த அந்த விளக்குகளுக்கு நேர் கீழே இருக்கும் இடங்களில் மட்டுமே வெளிச்சம் இருக்கிறன்ற மாதிரி தெரு விளக்குகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன.
விமானங்கள் இரவில் நகரங்களை அடையாளம் கண்டுபிடித்து நகரங்கள் மீது குண்டுகள் வீசாலிமருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது. அந்த விளக்குகளும் போர் நடந்த காலங்களில் தினசரி இரவு பத்து மணிக்கு மேல் முழுமையாக அணைக்கப்பட்டு விடும். அன்றைய கால கட்டத்தில் நகரத்தில் உள்ள பெரும்பகுதி வீடுகளில் அப்போது மின் இணைப்பு கிடையாது. மாற்றாக மண்ணென்ணெய் (கெரஸின்) தான் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் அப்போது எளிதில் கிடைக்காத பொருள் மண்ணென்ணெய்.
 எனவே இரவில் ஒன்பது மணிக்கு மேல் விழித்திருப்பவர்களை பார்ப்பதே அரிதாக இருந்தது. இரவு ஒன்பது மணியிலிருந்து அதிகாலை நான்கரை மணி வரை நகரம் முழுவதும் இயக்கமே நின்றுபோன மாதிரியான ஒரு தோற்றம் தோன்றும். பகலிலும், நகரில் இப்போது பார்க்கும் கூட்டத்தை அப்போது திருவிழா நாட்களில் கூட பார்க்க முடியாது. கரூர் நகரின் வருடந்தோறும் மே மாதம் கடைசி வாரங்களில் வரும் மாரியம்மன் திருவிழா மிகவும் பிரபலமான. அந்த பண்டிகையின் போது கூட, வண்டி வேஷம் பார்ப்பதற்கு கே.பி.சுந்தராம்பாள் பித்தளைப் பாத்திரத்தில் அக்னிச் சட்டி எடுப்பதை பார்ப்பதற்கும், அவர் பாடுவதை கேட்பதற்கும் பெருங்கூட்டம் கூடும்.
 இப்போதைய கூட்டங்களை ஒப்பிடும்போது அவை மிகச் சிறியதாகவே தெரிகிறது. மக்கள் தொகை இவ்வளவு இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைந்திருந்ததாலும், செய்தித் தொடர்புகள் இந்த அளவு இல்லாதிருந்ததாலும், தான் அப்போதைய கூட்டம் குறைவு. அதுபோன்ற காரணங்களால் தான் வாழ்க்கை ஓட்டமும் இவ்வளவு வேகம் நிறைந்ததாகவும் அழுத்தம் – இறுக்கம் நிறைந்ததாகவும் இருக்கவில்லை.
                                                               
                                                  இன்னும் தொடரும்….



இரண்டாம் உலகப்போர்





கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா

Saturday, January 11, 2014

கரூர் வரலாறு 4ம் பாகம்

கரூர் வரலாறு 3ம் பாகத்தில், பெத்தாச்சி செட்டியார் கட்டிய வளைவுப்பற்றி பார்த்தோம். அதே பெத்தாச்சி செட்டியார், கரூருக்கு ஒரு பாலம் கட்டிக்கொடுத்தார். அது 90 வருடங்களாகியும் இப்போதும் கம்பீரமாக, கரூருக்கும், திருமாநிலையூருக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்த பாலத்தை பற்றித்தான் இந்த 4ம் பாகத்தில் பார்க்க இருக்கிறோம்.
கரூரையும், திருமாநிலையூரையும் இணைக்கும் விதமாக இடையில் ஒரு பாலம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து அதற்கு பெரும் பொருளுதவி செய்திருக்கிறார் பெத்தாச்சி செட்டியார் அவர்கள். ஆனார் துரதிஷ்டவசமாக கடந்த 1919ல் அந்த தொடங்கப்பட்ட அந்த பாலம் கட்டி முடிக்கும் முன்பே மிக இளம் வயதிலேயே பெத்தாச்சி செட்டியார் அவர்கள் இறந்துவிட்டார். அந்தப் பாலமானது அவருடைய வழக்கறிஞர் ஸர். தேசிகாசாரியார் அவர்கள் அப்போதைய ஜில்லா போர்டின் தலைவராக இருந்தபோது, கடந்த 1924ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அந்தப் பாலம் வழக்கறிஞர் தேசிகாசாரியார் பெயரில்தான் அந்தப் பாலம் இன்று வரை அழைக்கப்படுகிறது. (சான்று படம் கீழே உள்ளது) அந்தப் பாலம் கடந்த 20.06.1924ம் ஆண்டு அப்போதைய சென்னை கவர்னர் ஹாக்ஹர்ஸ்டினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சீமாட்டி வெலிங்டன் வருகை நினைவாக பெத்தாச்சி செட்டியார் அவர்கள் கட்டிய ஞாபகார்த்த வளைவானது, கடந்த 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி பெத்தாச்சி பெயரில் மாற்றப்பட்டு, அன்று முதல் இன்று வரை பெத்தாச்சி செட்டியார் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
கரூருக்கும், பசுபதிபாளையத்திற்கும் இடையில் இருக்கும் பாலமானது கடந்த 1964ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு,அப்போதைய விவசாய அமைச்சரான திரு. கக்கன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கரூர் – திண்டுக்கல் இடையே இரயில் சேவை கடந்த 06.08.1988ம் ஆண்டு தொடங்கப்பட்டு அது, அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.



                                               இன்னும் தொடரும்….









Thursday, January 9, 2014

கரூர் வரலாறு பாகம் 3, உங்கள் பார்வைக்கு,            


           திருச்சிராப்பள்ளி – ஈரோடு இரயில் தொடர்பு 1868ல் அப்போதைய கிரேட் செளத் இண்டியன் ரெயில்வே கம்பெனியாரால் ஏற்படுத்தப்பட்டது. 1860ம் ஆண்டுகளில் சென்னையிலிருந்து, திருச்சிராப்பள்ளிக்கு, விழுப்புரம், விருத்தாசலம் மார்க்கமாக குறுக்கு பாதை அமைப்பதற்கு முன் , விழுப்புரம் – கடலு◌ார் – தஞ்சை வழியாக முதன்மை வழித் தடத்தை அந்த நிறுவனம் அமைத்தது. அதே சமயம் சென்னையிலிருந்து ஈரோடு வழியாக கோழிகோட்டுக்கு மெட்ராஸ் ரெயில்வே என்கிற நிறுவனம் இருப்புப் பாதை அமைத்திருந்தது. இந்த இரு வழித்தடங்களையும் இணைக்கும் விதமாகத்தான் திருச்சிராப்பள்ளி – ஈரோடு இரயில் பாதை அமைக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் மார்க்கமாக திருச்சிராப்பள்ளிக்கு இரயில் இணைப்பு ஏற்படுத்துவதற்கு முன்பே, திருச்சிராப்பள்ளி – ஈரோடு இரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடதக்கது.
                இந்த வழித்தடங்களின் மையத்தில் அமைந்திருந்த கரூர் நகருக்கு அருகில் ஓடிய அமராவதியில் அப்போது அமைக்கப்பட்ட இரயில்வே பாலம் நு◌ாற்றொன்பது ஆண்டுகளுக்கு பின் வந்த பெரும் வெள்ளத்தில், அதாவது, கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் மாதம் அடித்து செல்லப்பட்டது. பிறகு புதுப்பிக்கப்பட்டது. கரூருக்கு கடந்த 1868ம் ஆண்டுகளிலேயே இரயில் போக்குவரத்து வந்தது. கரூர் நகரம் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
                முதல் உலகப்போருக்கு பிறகு இங்கு குடிவந்த நகரத்தார் குலச் செம்மல், பெத்தாச்சி செட்டியார் கரூரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறார். செவி வழி செய்திகளின் படி செட்டிநாட்டு செல்வரான அவருக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கும் ஸர் பட்டம் பெற மிகுந்த விருப்பமாக இருந்ததாம். அதற்கா அவர் தன் குடும்ப வழக்கறிஞரான தேசிகாசாரியிடம் ஆலோசனை கேட்டாராம். அவர்  பெத்தாச்சி செட்டியாரை முதலில் ஒரு ஜமீந்தார்  பட்டத்தை பெபற்றுக் கொள்ளச் சொல்லி ஆலோசனை சொன்னதால், கரூருக்கு அருகில் விலைக்கு வந்த ஆண்டிப்பட்டி ஜமீனை வாங்கியிருக்கிறார். அதை நிர்வாகிக்க அருகிலிருந்த நகரான கரூரில் ஒரு தோட்ட விடுதி கட்டிக்கொண்டு இங்கேயே குடியிருந்திருக்கிறார். கரூரிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்து, சிதிலமடைந்திருந்த சுற்றுச் சுவர்களை புதுப்பித்து, மடவளாகத் தெருக்களை ஏற்படுத்தியுள்ளார். அந்நாள் கவர்னர் வெலிங்டன் பிரபு மற்றும் அவர் மனைவி சீமாட்டி வெலிங்டன் ஆகிய இருவரையும் கரூருக்கு அழைத்து வந்து நகராட்சியில் வரவேற்பு கொடுத்து, அதற்காக ஒரு ஞாபகார்த்த வளைவை (ஆர்ச்) நகராட்சி கட்டிடத்திற்கு அருகில் கட்டியுள்ளார். (படம் உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது)

                                                                                    இன்னும் தொடரும்....

பெத்தாச்சி செட்டியார் கட்டிய நினைவு ஆர்ச்

Wednesday, January 8, 2014

அமராவதி நதிக்கரையில், தமிழகத்தின் மையப் பகுதியில், திருச்சிராப்பள்ளியையும், ஈரோட்டையும் இணைக்கும் இருப்புப் பாதை தடத்தில், அவ்விரு நகரங்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் நகரம் கரூர் ஆகும். கடந்த 1874ம் ஆண்டிலிருந்து கரூரானது நகராட்சியாக அங்கீரிக்கப்பட்டது. பின்னர் 1974ம் ஆண்டு முதல் முதல் நிலை நகராட்சியானது. தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக இருக்கிறது, கரூர் நகர ஒருங்கினைப்பில், கரூர் நகராட்சியோடு, இனாம் கரூர், தாந்தோன்றி போன்ற மூன்றாம் தர நகராட்சிகளும், ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 1951ம் ஆண்டில் கரூர் நகராட்சியின் மக்கள் தொகையானது சுமார் 42,155 ஆகும். கடந்த 2001ம் ஆண்டு கால வாக்கில் மக்கள் தொகையானது சுமார் 76,336 ஆக அதிகரித்தது. தற்போது 2014ம் ஆண்டு மக்கள் தொகையானது சுமார் 9,33,791 ஆக உள்ளது. பரப்பளவில் சுமார் 2.895.57 சதுர மீட்டராகும். (பார்க்க. தமிழ்நாடு அரசு இணையதளம்)
சேரர்களின் தலைநகரான வஞ்சியே இன்றைய கரூர் எனச் சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கரூர். சோழர்களின் ஆறு தலைநகரங்களில் ஒன்றாகும்.கரூரைச் சுற்றியுள்ள ஆறு நாட்டார் மலை, சுக்காலியூர் மற்றும் ஐவர்மலை போன்ற இடங்களில் காணப்படும் சமணர் படுக்கைகள் கி.மு. மூன்றாம் நு◌ாற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாம் நு◌ாற்றாண்டு வரை இந்தப் பகுதியில் சமணம் சிறப்புற்றிருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.    
தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் கரூர் பசுபதிஸ்வரர் ஆலயமும் ஒன்று. பேரரசன் இராசராச சோழனின் ஆன்மிக குருவும் தஞ்சைப் பெரிய கோயிலின் லிங்கத்திருவுருவைப் பிரதிஷ்டை செய்தவரும் திருவிசைப்பா இயற்றியருவருமான கரூவூர் தேவர் அவதரித்த இடம் கரூர்.
                                           இன்னும் தொடரும்…

Sunday, January 5, 2014

கரூரை பற்றிய சிறிய தகவல் மற்றும் முன்னுரை, 

    இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.                

    2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

            ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.

               கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது.

         கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சிமற்றும் தஞ்சாவூர் ஆகிய வட மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.

         கரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டிற்கு தென் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், சேலத்திற்கு தெற்கே 100 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ. தொலைவிலும், கோவைக்கு கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
                                                          இன்னும் தொடரும்.....

Tuesday, December 31, 2013

வெகுவிரைவில் கரூர் மாவட்டத்தைப் பற்றிய 

தகவல்களை இந்த பகுதியில் நீங்கள் 

பார்க்கவும்படிக்கவும், ரசிக்கவும் உள்ளீர்கள். 

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு 

நல்வாழ்த்துக்கள். 

நன்றி.

 உங்களின் ஒருவன் 

தனசேகரன்.